பொன்தேடி பொருள்தேடி அலையும் நாம் மரணத்தைப் பற்றி யோசித்தது உண்டா? எதிர்காலம் எப்படியிருக்கும்? சுகவாழ்வு வாழவேண்டுமே... எங்கு செல்லலாம்- எதைத் தேடலாம்- எதைச் சேர்க்கலாம் என தினம்தினம் தேடுதல்களை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது என்னுடையது- இது உன்னுடையது என பிரித்தாளும் மனப்பான்மையால் மதம், இனம், மொழி, நாடு என அனைத்தையுமே பிரித்து ஆளுமை செய்கிறோம். ஆனால் போகும்போது எதையாவது கொண்டுசெல்கிறோமா என்றால் இல்லை. கீதாசாரத்தில் கூறியிருப்பதுபோல, "எதைக்கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிவிடுகிறது.'

Advertisment

குழந்தைப் பருவத்திலேயே நோயாலும் விபத்தாலும் பலர் மரணமடைவதைக் காண்கிறோம். வாலிபப் பருவத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு என்ற பெயரில் உடலுறுப்புகளை தானம் செய்வதையும் பார்க்கிறோம்.

குடுகுடு கிழவர்களாகியும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் உண்டு. வாழவேண்டிய வாலிப வயதில் அகால மரணத்தைத் தழுவுபவர்களும் உண்டு. ஒவ்வொருவர் வாழ்விலும் நாள் குறிப்பிடப்படாமல் இருப்பதே மரணம். இந்த மரணம், விபத்து, கண்டம் பற்றி ஜோதிடரீதியாக ஆராயும்போது, நவகிரகங்களின் செயல்பாடே காரணம் என்று அறியமுடிகிறது.

murugan

Advertisment

ஜனன ஜாதகத்தில் 8-ஆம் பாவம் ஆயுள் ஸ்தானமாகும். நவகிரகங்களில் ஆயுள்காரகன் சனி ஆவார். 8-ஆம் பாவமும் சனி பகவானும் பலம்பெற்று அமைந்துவிட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். 8-ஆம் பாவம் பலமிழந்து, சனியும் 8-ஆம் அதிபதியும் பகை, நீசம், பாவகிரகப் பார்வை பெற்றிருந்தால் இளம்வயதிலேயே கண்டங்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படுகிறது. பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் கண்டங்கள் உண்டாகின்றன.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4-ஆவது தசையாக வரும் சனி தசையும், அஸ்வினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5-ஆவது தசையாக வரும் செவ்வாய் தசையும், பரணி, பூரம், பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 6-ஆவது தசையாக வரும் குரு தசையும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆவது தசையாக வரும் ராகு தசையும் கண்டத்தை உண்டாக்கும் என்பது பொது விதி. என்றாலும் தசாநாதன் பலமாக இருந்தால் கெடுதி செய்யமாட்டார்.

ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகஸ்தானம் உண்டு. அந்த ஸ்தானாதிபதியின் தசாபுக்தியும், ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசாபுக்தியும் நடைபெறும் சமயங்களில் கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். சர லக்னம் என வர்ணிக்கப்படும் மேஷம், கடகம், துலாம், மகர லக்னங்களுக்கு 2, 7-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்படும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்ப லக்னங்களுக்கு 3, 8-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். உபய லக்னம் என வர்ணிக்கப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு 7, 11-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமாகும்.

ஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும், மாரக ஸ்தானாதிபதியின் தசாபுக்திக் காலங்களிலும் கண்டங்கள் அல்லது உடல் உபாதைகள் உண்டாகும் சூழ்நிலைகள் ஏற்படும். அக்கிரகங்களை சுபகிரகங்கள் பார்வை செய்தால் பாதிப்புகளைக் கடக்கமுடியும். அதுவே பாவகிரகப் பார்வை, பாவகிரகச் சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து, அந்த நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்றவையும் நடைபெற்றால் மாரகத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதியாவார். 2, 7-க்குரிய கிரகமான சுக்கிரனின் தசாபுக்திக் காலங்களிலும், 2, 7-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8-க்கு அதிபதிகள் மாரகாதிபதிகள்.

அதனால் 3-ஆம் அதிபதி சந்திரனின் தசாபுக்திக் காலங்களிலும், 8-ஆம் அதிபதி குருவின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 3, 8-ல் அமையும் கிரகங்களின் தசாபுக்திக் காலத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11-க்கு அதிபதிகளான குரு, செவ்வாய் மாரகாதிபதிகளாகும். இவற்றின் தசாபுக்திக் காலத்திலும், 7, 11-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7-க்கு அதிபதிகளான சூரியனும் சனியும் மாரகாதிபதிகள். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும், 2, 7-ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8-க்கு அதிபதிகளான சுக்கிரனும் குருவும் மாரகாதிபதிகள். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும், 3, 8-ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11-க்கு அதிபதிகளான குருவும் சந்திரனும் மாரகாதிபதிகள். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும், 7, 11-ல் அமையப் பெற்றுள்ள கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.

துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7-க்கு அதிபதியான செவ்வாய் மாரகாதிபதியாகும். செவ்வாயின் தசாபுக்திக் காலங்களிலும், 2, 7-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8-க்கு அதிபதிகளான சனி, புதன் மாரகாதிபதிகள். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும், 3, 8-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11-க்கு அதிபதிகளான புதன், சுக்கிரன் மாரகாதிபதிகள். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும், 7, 11-ல் அமைந்துள்ள கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7-க்கு அதிபதிகளான சனி, சந்திரன் மாரகாதிபதிகளாகும். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும் 2, 7-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8-க்கு அதிபதிகளான செவ்வாய், புதன் மாரகாதிபதிகளாகும். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும், 3, 8-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11-க்கு அதிபதிகளான புதன், சனி மாரகாதிபதிகள். இவற்றின் தசாபுக்திக் காலங்களிலும் 7, 11-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரும்.

செல்: 72001 63001